Tuesday, September 3, 2013

நான் 23 வயது பெண்

அன்புள்ள அம்மாவிற்கு — 
நான் 23 வயது பெண். எனக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனாதை. நான் விடுதியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள ஒரு மனிதர் என்னைப் பார்த்து அனுதாபப்பட்டு, "திருமணம் செய்து கொள் கிறேன்...' எனக் கூறி அழைத்து வந்தார்.
அவரைப் பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டேன்... அனைவரும் அவரை, "நல்லவர்' என்று கூறினர். எனக்கு படிப்பறிவு இல்லை. அப்போது அவர் வயது 35. என் வயது 17. "என்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என அழைத்து வந்தவர், மூன்று குழந்தைகள் பிறந்த பின்பும் திருமணம் செய்யவில்லை. அவர் செல் வந்தர்; என்னை நல்ல முறை யில் வைத்திருந்தார்.
எனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் தான் தெரியும், அவருக்கு ஏற்கனவே மணமாகி முதல் மனைவியும், மூன்று குழந்தை கள் உண்டு என்று. அவர்களுக்கு தெரியாமல், என்னை தனி வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். எங்கள் விஷயம் தெரிந்தவுடன், அவர்கள் வீட்டினர் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிவிட்டு, "அவளை விட்டு விலகி வந்தால் இங்கு இரு, இல்லாவிட்டால் நீ வேண்டாம்...' என கூறி விட்டனர். அவர் என்னிடம் இருந்து விட்டார். ஏழு வருடங்கள் ஆகிறது. என்னை நன்றாக வைத்திருந்தார். எங்களிருவருக்கிடையே இருந்த அளவுகடந்த அன்பினால், குடும்ப கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.
என் பிரச்னை...
தற்போது அவரிடம் நிறைய மாற்றங்கள். நான் தற்கொலை செய்ய முயன்ற போது என்னை காப்பாற்றி, சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்கவில்லை; குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இப்போது, அவர் 15 வயதுள்ள பெண் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். பணம் கொடுப்பதில்லை. வீட்டிற்கு சரியாக வருவதில்லை. கேட்டால், "நான் ஆம்பிளை, எப்படி வேண்டுமானலும் இருப்பேன். எது வேண்டு மானாலும் செய்வேன். நீ கேட்கக் கூடாது...' என்கிறார்.
இப்போது தகாத நண்பர்களின் சேர்க்கை வேறு அவருக்கு. அவர் நண்பர்கள் சொல்படி இப்போது அப் பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார். எனக்கு எந்த தொழிலும் தெரியாது; படிக்கவில்லை; குழந்தைகளை பராமரிக்க யாருமில்லாததால், வேலைக்கும் செல்லவில்லை.
ஒன்றரை வயது கைக்குழந்தை வேறு உள்ளது. தங்களின் ஆலோ சனைக்காக காத்திருக்கிறேன். அவர் என்னை விட்டு விலகி செல்ல திட்டம் போட்டுக் கொண்டிருக் கிறார். நான் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் மற்றும் துணி முதற் கொண்டு எடுத்துச் செல்கிறார். அருகில் இருப்பவர்கள், "பொறுமை யாக இரு' என்கின்றனர். தாங்கள் தான் எனக்கு நல்ல பதில் தர வேண்டும்.
— அன்பு மகள்.

அன்பு மகளுக்கு — 
உன் கடிதம் கண்டேன். உனது நிலை கண்டு மிகவும் வருத்தப் படுகிறேன். நீ படிப்பறிவு இல்லாதவளாக, அனாதையாக இருக்கலாம். ஆனால், எது நல்லது - எது கெட்டது என்று பகுத்தறியும் அறிவு இல்லாதவளாக இருந்து விட்டாயே என்பதுதான் என் வருத்தம். 17 வயதில் உனக்கு உலக அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போதும் அப்படியே இருப்பது தப்பு கண்ணம்மா. எப்போது உன்னை மணப்பதாகக் கூறி அழைத்து வந்தவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகளோடு இருக்கின்றார் என்பது உனக்குத் தெரிய வந்ததோ - அப்போதே ஒரு குழந்தை பிறந்த கையோடு - போதும் இவருடன் வாழ்ந்த வாழ்க்கை என்று நீ வெளியேறி இருக்க வேண்டும். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு, மூன்று என, பெற்றுக் கொண்டே போனாய்?
நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது, அவர் காப்பாற்றி, சமாதானப்படுத்தி, திருமணம் செய்து கொண்டார் என்று எழுதியிருக் கிறாய். காப்பாற்றி, சமாதானப் படுத்தி உனக்கென்ற நல்ல துணை வரைத் தேடி, திருமணம் செய்து வைத்திருந்தாலோ அல்லது உனக்கென ஏதாவது தொழிற் கல்விக்கு ஏற்பாடு செய்திருந்தாலோ அது நல்ல மனிதனுக்கு அடை யாளம்!
திருமணம் செய்து கொள்வது, அதுவும் முப்பத்தைந்து வயதில், பதினேழு வயதுப் பெண்ணை மணப்பது, எந்த விதத்தில் நியாயம்? இதிலிருந்தே அந்த மனிதரின் சுயநலம் தெரியவில்லை?
மற்றவர்கள், அதாவது, அருகில் இருப்பவர்கள், "பொறுமையாக இரு' என்று சொல்கின்றனர் என்றால், சட்டப்படியோ, வேறு விதமாகவோ நீ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதினால் தான். நிஜத்தில், நீ அந்த மனிதரின் சட்டபூர்வமான, மனைவி இல்லை; கூட்டி வந்து வைத்திருக்கிறார்.
விரட்டி விட்டால் தட்டிக் கேட்கவோ, வேறு நடவடிக்கை எடுக்கவோ உனக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. இதை நான் சொல்ல மிகவும் வருத்தப் படுகிறேன். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியிருக்கிறாய் கண்ணம்மா. இனிமேலாவது விழித்துக் கொள். போதும் இந்த ஆளுடன் நீ வாழ்ந்தது. நாலாவது ஒன்று வயிற்றில் வரும் முன், இந்த உறுதியில்லாத வாழ்க்கையை உதறு. மறுபடியும் ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் வேலை கிடைத்தாலும் கூட பரவாயில்லை. உன் குழந்தை களுடன் கிளம்பி, இது போன்ற இல்லத்தில் தங்க முடியுமா என்று பார்.
அதன்பின் ஏதாவது ஒரு தொழிலை, அது சமையல் தொழிலானாலும் சரி - முறையாக, நேர்த்தியாகக் கற்றுக் கொள். படித்தவர்களுக்குத்தான் இந்த நாட்டில் வேலை கிடைக்கும் என்கிற, சித்தாந்தத்தை மாற்று... எந்தவொரு வேலையும் மட்டமில்லை.
உன் குழந்தைகள் - தங்களது நிலையை உணர்ந்து, உள்ளுக்குள்ளேயே வெந்து, குமையத் துவங்கும் முன், உனக்கென ஒரு பாதை அமைத்துக் கொள். எத்தனையோ மருத்துவமனைகளில் ஆயா வேலை, வீடுகளில் குழந்தை களைப் பார்த்துக் கொள்ளும் வேலை, கூட்டிப் பெருக்கும் வேலை... இப்படி எதுவோ ஒன்று... நாலு வீடுகளில் காலையில் இட்லி, வடை சுட்டுக் கொண்டு போய் விற்றாவது பிழைப்பை நடத்து... கவுரவமாக இருக்கும்.
இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!

No comments:

Post a Comment