Thursday, October 3, 2013

ஒரு பணக்கார பெண்ணுடன் பழக நேர்ந்தது. அவள் திருமணமானவள்; வயது 30

எனக்கு வயது 27; திருமணம் ஆகவில்லை. படித்துவிட்டு, பிசினஸ் செய்து, சமுதாயத்தில், ஓரளவு நல்ல அந்தஸ்தில் உள்ளேன். என் வாழ்க்கையில், எனக்குன்னு ஒருத்தி இருக்க வேண்டும். எனக்காக அவள்; அவளுக்காக நான் என, உயிருக்கு உயிராக வாழவேண்டும் என்று, ஆசைப்படுபவன் நான். அந்த மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப்பாளா என்று, ஏங்கி தேடிக் கொண்டிருந்தேன்.
ஒரு சில ஆண்களை போல், ரோட்டில் செல்லும் பெண்களை சைட் அடிப்பது, ஜொள் விடுவது, அரட்டை அடிப்பது, தினம் ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவது, இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. அதை நான் கேவலமாக நினைப்பவன்; அதில், உடன்பாடும் இல்லை.
கடந்த ஆறு வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, ஒரு பணக்கார பெண்ணுடன் பழக நேர்ந்தது. அவள் திருமணமானவள்; வயது 30. அவளது கணவனும், நானும் பிசினஸ் பார்ட்னர்ஸ்; அதுவே, எனக்கு சாதகமானது. 
அவளும், நானும் மணிக்கணக்காக பேசுவோம். அதுவே, எங்களிடையே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவளுடைய கணவனை பிடிக்கவில்லை என்று சொல்வாள். அவளுடைய அழகான தோற்றம், வசீகர பார்வை, கலகலப்பான பேச்சு, எனக்கு மிகவும் பிடிகும்.
நான் எதிர்பார்த்தது போலவே அவள் இருந்தாள். "உன்னை, எனக்கு, மிகவும் பிடித்திருக்கிறது' என்று சொன்னாள். எனக்காக அவள், அவளுக்காக நான் என்று, இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்தோம். அவள் கணவன் இல்லாத நேரத்தில், அடிக்கடி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டோம். எங்களைப் போல் இல்லற வாழ்க்கையை அனுபவித்தவர்கள், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.
உண்மையிலேயே சொர்க்கம் என்றால், என்ன என்பதை, அவளிடம்தான் தெரிந்து கொண்டேன். 
"எந்த சூழ்நிலையிலும், நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன். நாம் இருவரும், சாகும்வரை, இதே போல் இருக்க வேண்டும்; நீ இல்லை என்றால், உயிரை விட்டு விடுவேன்...' என்று, சொல்வாள்.
"என் வாழ்கையில், நீ எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். உன்னைத்தவிர, வேறு எந்த ஆணையும் தலை நிமிர்ந்து பார்க்க மாட்டேன்...' என்றாள்.
இவை எல்லாம் கடந்த, ஆறு வருடங்களாக நடந்தவை. அதற்கு அப்புறம்தான், என் வாழ்க்கை நாசமாக துவங்கியது. இவ்வளவு நாட்களாக, என்னைவிட அழகான, வசதியான வேறு ஆள் கிடைக்காததால் தான், என்னிடம் பழகி இருக்கிறாள் என்று, இப்போதுதான் தெரிந்தது.
ஒரு நாள், அவள் வீட்டிற்கு எதிர்பாராதவிதமாக சென்றபோது, வேறு ஒருத்தனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டேன். உடனே அவள், "இனிமேல், என்னைப் பார்க்க வர வேண்டாம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை...' என்று, சொல்லி விட்டாள்.
இவ்வளவு நாட்களாக, என்னிடம் நல்லவள் போல் நடித்து, பாசத்துடன் இருப்பது போல் பாசாங்கு செய்து, ஆசை வார்த்தை பேசி, என் மனதை கெடுத்து, ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாள். 
நான் மனசார விரும்பிய, என் மானசீகக் காதலி, இன்னொருவனுடன் இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தை நினைத்து, அழுது கொண்டிருக்கிறேன்... அவளைத் தவிர, வேறு ஒருத்தியை நினைக்கவும் தோன்றவில்லை.
அவள் என்னுடன் பழகியதை மறக்க முடியவில்லை. அவள் நெறிகெட்டவள் என்றும் ஏற்கனவே, இதேபோல், இரண்டு ­மூன்று பேருடன் பழகியிருப்பதும்; போர் அடித்தால் ஆளை மாற்றும் பழக்கமுடையவள் என்றும் தெரிய வந்தது.
இப்போது, பெண்கள் என்றாலே, இதே மாதிரி தான் இருப்பர் என்று தோன்றி, மனதில் வெறுப்பு ஏற்படுகிறது. பெண் இனத்தை கேவலப்படுத்தும், இம்மாதிரி பெண்களும் இருக்கின்றனரே... புடவையை மாற்றுவதுபோல், ஆளை மாற்றும் பெண்களை எந்த வகையில் சேர்ப்பது? தெரு நாய்க்கும், இவளுக்கும் என்ன வித்தியாசம். 
"தவறான பெண்ணுடன் பழகி ஏமாந்து விட்டோமே... உயிரையே வைத்திருந்த ஒருத்தி என்னை ஏமாற்றி விட்டாளே...' என்று, தின¬ம் மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறேன்.
இந்த கேடு கெட்ட சமுதாயத்தில், வாழப் பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நாங்கள் பழகியது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்! நீங்கள் தான் எனக்கு நல்வழி காட்ட வேண்டும். 
என்னால் தொழிலில் கவனம் செலுத்த ¬முடியவில்லை. பைத்தியம் பிடித்தவன் போல் யாருடனும், "ப்ரியாக' பேசாமல், எப்போதும் டென்ஷனுடன் உள்ளேன். அவளை மறந்து வாழ வழி சொல்லுங்கள்!
இப்படிக்கு,
உங்கள் புத்திமதியை எதிர்பார்த்து மிகுந்த மனவேதனையுடன் உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. படித்ததும் வருத்தமும், வேதனையும் தான் ஏற்பட்டது. வருத்தம் உன்னுடைய நிலைமை கண்டு அல்ல; உன்னை நம்பி, பார்ட்னராக சேர்த்துக் கொண்ட நண்பனின் மனைவியை, ஆறு வருடங்களாக, நண்பருக்கே தெரியாமல் அனுபவித்து விட்டு, "இந்த உலகமே கேடு கெட்ட உலகம்' என்கிறாய் பார்... அதனால்!
வேதனை: "வாழ்க்கையில் எனக்குன்னு ஒருத்தி இருக்கணும்... எனக்காக அவளும், அவளுக்காக நானும் உயிருக்குயிராக வாழ வேண்டும்' என்ற, உயர்ந்த லட்சியத்தை, நீ சொன்னாய் பார்... அதற்காக!
தெருவில் போகும் பெண்களை, "சைட்' அடிப்பது, ஜொள் விடுவது, அரட்டை அடிப்பது போன்ற கேவலமானச் செயல்களை செய்ய மாட்டாய்... ஆனால், பிறர் மனைவியோடு, உலகத்தில் யாரும் அனுபவிக்க முடியாத இன்பங்களை அனுபவிப்பாய்; அதில் தவறேயில்லை... புடவையை மாற்றுவது போல அவள் புருஷனை மாற்றியதுதான் தவறு... அப்படித்தானே?
உனக்கு புத்தி இல்லை? "தாலி கட்டிய கணவனை பிடிக்கவில்லை... ஆனால், நம்மை பிடித்திருக்கிறது என்கிறாளே... புருஷனுக்கே அந்த நிலை என்றால், நம்மை எப்படி நடத்துவாள்...' இதை ஏன் நீ நினைத்துப் பார்க்கவில்லை? இப்படிப்பட்ட இழிவானச் செயலை செய்து, அதற்கு நியாயம் கற்பித்து, அவள் மீது மட்டும் தான் குற்றம் என்கிற ரீதியில் பேசுகிறாய்...
நீயும், அவளும் படுக்கையிலிருந்ததை, அவள் கணவன், அவன் தான் உன் நண்பன், பார்த்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவனுக்குப் பைத்தியம் பிடித்து, சட்டையை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்க மாட்டானா...
தம்பி, எது உன்னுடையது... அதை, நீ இழந்ததாக வருத்தப்படுவதற்கு? நீ சாப்பிட்டதே, இன்னொரு வருக்குச் சொந்தமான தோப்பு, திருட்டு மாங்காய். அது எப்படி உனக்கே சொந்தமாக முடியும்? உன்னைப்போல இன்னொருவன், அவனைப் போல அடுத்தவன்...
வாழ்க்கையில் கல்லூரி படிப்பும், பிசினஸ் செய்வதற்கான அறிவும், திறமையும் மட்டும் இருந்தால் போதாது; விவேகம் வேண்டும்.
நமக்கு சொந்தமில்லாத ஒற்றை ரூபாயைக் கூட, "இது என்னுடையது இல்லை' என்று சொல்கிற, மனோ வலிமை வேண்டும். அழகான, வசதியான, வசீகர தோற்றம், பார்வை, பேச்சு உடைய இன்னொருத்தன் மனைவி, கையால் அமிர்தத்தையே தந்தாலும், "வேண்டாங்க... நான் இப்பத்தான், என் பெண்டாட்டி கையாலே வயிறு முட்டக் கஞ்சி சாப்பிட்டு வந்தேன்...' என்று, மறுக்கக் கூடிய பக்குவம் வேண்டும்.
உனக்கென்று, கஞ்சியைக் கொடுத்தாலும் உண்மையாய், உத்தமியாய் இருப்பவளைப் பார்த்து மணந்து கொள்... அதற்கு முன், இந்த ஆறு வருடத் தொடர்பினால், உன் உடம்பில், ஏதேனும், பழுது இருக்கிறதா என்று, அதாவது, "எச்.ஐ.வி.,' டெஸ்ட் செய்துகொள். 
ஏனெனில், நீ சாப்பிட்டது பலரும் சாப்பிட்ட எச்சில் தட்டில். அப்படி ஏதாவது குறை இருப்பின், உனக்குக் கழுத்தை நீட்டும் அப்பாவியும், அவஸ்தைப் படக்கூடாது பார்!
தொழிலில் முழுக்கவனம் செலுத்து; எல்லாத் தவறையும் செய்து, பெண்களை, "தெரு நாய்' அது, இது என்று, மட்டமாய் பேசாதே... பெண்மைக்கு மதிப்பு கொடு.
"யாருக்கும் தெரியாமல் தவறு செய்தோம்; என்னையும், அவளையும் தவிர, வேறு யாருக்கும் தெரியாது' என்று, ஒரு போதும் நினைக்காதே! உங்களைத் தவிர, இன்னொருவனுக்கும் தெரிந்திருக்கிறது; அதனால்தான், உனக்கு இத்தனை அவதி, துயரம் எல்லாம். அந்த ­இன்னொருவர் தான் கடவுள்.
கடவுளுக்குத் தெரியாமல் நாம், சின்ன குண்டூசியைக் கூட நகர்த்தி விட முடியாது. நல்லதே நினை; நல்லது நடக்கும்!

No comments:

Post a Comment