Friday, October 25, 2013

என் மனைவியை நான் விசாரிக்கையில், அவர்கள் தொடர்பு நீடித்ததாகவும்...

என் வயது 51. என் மனைவியின் வயது 43. வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் இருக்கின்றனர். இருவரும் படித்து வருகின்றனர். நான் அரசு வேலையிலும், என் மனைவி இல்லத்தரசியாகவும் இருக்கிறாள்.
நான், என் மனைவியை காதலித்து மணந்தவன். ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இருந்து, இருவரும் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், இரு குழந்தைகள் பிறந்தனர்.
குடும்ப நண்பர் ஒருவர் உருவில், எங்கள் வாழ்வில் புயல் நுழைந்தது. அவரும், என் மனைவியும் பழகியது நட்பு முறையில் என்று எண்ணிய எனக்கு, இரு குழந்தைகள் பிறந்த பின்னர், அவரும், என் மனைவியும் எழுதிக் கொண்ட கடிதங்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான், அவர்கள் நட்பு, எல்லையை மீறியது தெரிய வந்தது. என் மனைவி, நகை மற்றும் பணம் அவருக்கு கொடுத்து இருப்பதும் தெரிய வந்தது. 
இது தெரிந்து, என் மனைவியை நான் கண்டித்த போது, அவர்கள் நட்பு, எல்லை மீறியது ஒரு முறைதான் (முத்தமிட்டது) என்றும், இனி தவறுகள் ஏற்படாமல் இருப்பதாகவும் உறுதி அளித்தாள். 
நானும், பணம், நகை இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. குடும்ப பெயர் கெடக் கூடாது எனக் கூறி, அவர்கள் இருவரும் இனி பழக வேண்டாம் எனத் தடுத்து விட்டேன். அவளும் உறுதி அளித்ததால், முழு சுதந்திரம் கொடுத்தேன்.
இதன்பின், என் அலுவல் விஷயமாக நான் வெளிநாடு செல்ல நேர்ந்தது. ஐந்து வருடங்கள். மனைவி, குழந்தைகளை அழைத்துப் போக முடியாத சூழல். மீண்டும் தாயகம் திரும்பியதும், இன்னும் ஒரு அதிர்ச்சி... என் மனைவியும், நண்பரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், எழுதிய டயரி குறிப்புகள், எதேச்சையாக என் பார்வையில் சிக்கியது. 
இது குறித்து மீண்டும் என் மனைவியை நான் விசாரிக்கையில், அவர்கள் தொடர்பு நீடித்ததாகவும், அவர்கள் காதலித்ததாகவும், முன்று முறை உடலுறவும் கொண்டதாகவும் கூறி, ஆயினும் என் மேல் இருக்கும் அன்பு, இதனால் பாதிக்கக் படாது என்றும் கூறினாள்.
நான் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று கூறியும், அதை மீறியதற்கு எந்த வருத்தமும் அடைந்ததாகத் தெரியவில்லை. நான் இதுபற்றி கேட்டபோது, அந்த நண்பர் இப்போது உயிரோடு இல்லை என்றும், எனவே இந்த வயதில் இவற்றை பற்றி பேசுவதும், நடந்து போன, முடிந்து போன சம்பவங்கள் பற்றி நினைப்பதும் வேண்டாத ஒன்று எனத் தெரிவித்து விட்டாள்.
இந்த சம்பவங்கள் தெரிய வந்ததில் இருந்து, மன அமைதி இன்றி நடைப்பிணமாக வாழ்கிறேன். வயது வந்த குழந்தைகள் இருப்பதால், எந்த அதீதமான முடிவும் எடுக்காமல் என்னை நானே சமாதானம் செய்து வருகிறேன்.
என் மனைவியோ, என் வயதான பெற்றோர், என் குழந்தைகள் மற்றும் எனக்கும் தன் கடமையில் இருந்து தவறவில்லை. மனைவி என்ற அளவில் வேண்டுமானால், அவளின் வெளித் தொடர்பு தவறாக இருக்கலாம் என்றும், ஆயினும் எப்போதும் என்னை விட்டுப் போக மாட்டேன் என்றும் கூறி, இவற்றை எல்லாம் மறந்து விடச் சொல்கிறாள்.
மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் நான் மகாத்மா அல்ல. அதே நேரம், மறக்காவிட்டால், இந்த நினைவுகள் என்னைத் தான் பாதிக்கும் என்றும் தெரிகிறது. இந்த வயதில் குழந்தைகள் நலன், என் அந்தஸ்து இவற்றால், அவளை துறக்கவும் முடியாது. என் காதலும் அந்த முடிவை அங்கீகரிக்காது. இருதலைக் கொள்ளி எறும்பாக உணர்கிறேன்.
உண்மையான காதலுக்கு, பெண்கள் அளிக்கும் கவுரவம் இதுதானா... சுதந்திரம் அளிக்கும் ஆண்கள் எல்லாம் முட்டாள்களா? என்னை அமைதிப்படுத்திக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்? 
இப்படிக்கு,
அன்பு சகோதரன்.


அன்புள்ள நண்பருக்கு— 
உங்கள் கடிதம் கிடைத்தது. படித்து மிகவும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
நீங்கள், உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல, எல்லாப் பெண்களும் உண்மையான காதலை இப்படி மட்டம் தட்டுவதில்லை; பெண்களுக்கு சுதந்திரம் அளிப்பது தவறும் இல்லை. நீங்கள் எல்லை மீறிய விரக்தியில், இப்படியெல்லாம் எழுதியுள்ளீர்கள்.
நண்பரே... என்றைக்கு உங்கள் மனைவிக்கும், அந்தக் குடும்ப நண்பருக்கும் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு இருப்பது தெரிய வந்ததோ, அப்பொழுதே நீங்கள் அவளை முழுசாக உங்கள் பக்கம் திருப்பி இருக்க வேண்டும். அவளது மனம் எதனால் அல்லது எதைக் கண்டு அந்தப் பக்கம் அலைபாய்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்து, அவள் மனசை மாற்றியிருக்க வேண்டும். அல்லது அந்தக் குடும்ப நண்பருக்கு தகுந்த எச்சரிக்கை கொடுத்து, அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் கண்டித்தோ, வாக்குறுதி வாங்கியோ ஒரு பயனுமில்லை. பல சமயத்தில், பல விஷயங்களை நேருக்கு நேர் நின்று மோதுவதைக் காட்டிலும், மறைமுகமாக மோதி, தீர்வு காணுவதுதான் புத்திசாலித்தனம்.
நீங்கள் கேரம் போர்டில் விளையாடி இருக்கிறீர்களா... பாக்கெட்டுக்கு நேராக இருக்கும் காய்களை அடித்து உள்ளே தள்ளுவது பெரிய விஷயமில்லை. நாம் அடிக்க வேண்டிய காய் எதிர்ப்பக்கம் நட்ட நடுவில் இருக்கும். அதை பாக்கெட்டுக்குள் தள்ள, ஸ்டிரைக்கரை இடதுபக்கம் அல்லது வலது பக்கம் கட்டையில் அடிக்க வேண்டும். அப்படி குறி வைத்த ஸ்டிரைக்கர் அங்கே மோதி, நமது காய் பக்கம் வேகமாய் திரும்பி, அதை பாக்கெட்டுக்குள் தள்ளும். இதற்கு ஆங்கிலத்தில், "தேர்ட் பாக்கெட் எய்ம்' என்பர்.
அதுபோல வாழ்க்கையிலும் சில, "தேர்ட் பாக்கெட் எய்ம்' உள்ளது நண்பரே. எதை, எங்கே, யாரிடம் சொன்னால், இங்கே, இந்த இருவரும் தங்களது செய்கைகளை உணர்ந்து, பிரிவர் என்பதை யோசித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட இருவரை விட்டு, ஐந்து வருடம் வெளிநாடு போய் வந்தது... உங்களது அசட்டுத் தனம் தான்.
இப்பொழுது அந்த மூன்றாம் மனிதர் இல்லை. ஓகே., அதைப்பற்றி பேசி, மறுபடி மறுபடி மனசைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். கண்டிப்பாய் உங்களால், உங்கள் மனைவியை மன்னிக்க முடியாது. நடந்ததை மறக்கவும் முடியாது. அதே சமயம், மானசீகமாய், மற்றவர்களுக்குத் தெரியாமல், ஏன், உங்கள் குழந்தைகளுக்குக் கூடத் தெரியாமல், எந்த கோர்ட்டுக்கும் போகாமல், அவளை விவகாரத்து செய்து விடுங்கள். 
அதாவது, அவள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும்; உங்கள் குழந்தைகளுக்குத் தாயாக, உங்கள் பெற்றோருக்கு சேவை செய்யும் ஒரு கேர் டேக்கர் போல, உங்களுக்கு சமைத்துப் போடட்டும், ஒரு சமையற்காரியாக. 
இவைகளுக்கு, நீங்கள் தரும் சம்பளம் தான், உங்கள் மனைவி என்கிற அந்தஸ்து. யோசித்துப் பாருங்கள். நம்மிடம் வேலை செய்ய வருகிற பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, நம்மை எந்த விதத்திலும் பாதிக்காதல்லவா... அவள் யாரோ... நீங்கள் யாரோ? வாழ்க்கை யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை.

No comments:

Post a Comment