Saturday, November 8, 2014

அத்தை கணவரிடம் படாதபாடு பட்டேன்

என் வயது 42; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்ததால், சொந்த அத்தை எடுத்து வளர்த்தாள். 13 வயதில் பெரியவளாகி, அத்தை கணவரிடம் படாதபாடு பட்டேன். சிறுமி என்று கூட பார்க்காமல், தன் காம இச்சையை அடிக்கடி தீர்த்துக் கொண்டார் மாமா. இது அத்தைக்கு தெரியவர, உடனே திருமணம் செய்து வைத்துவிட்டார். 
கணவர் வெளிநாட்டில் இருந்தார்; ரொம்ப வசதியானவர். திருமணம் ஆகும் போது அவருக்கு வயது, 24. எங்களுக்கு ஒரு பையன், இரண்டு பெண் என, மூன்று குழந்தைகள் பிறந்தனர். தற்போது, இரண்டு பெண்ணுக்கும் வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டோம். 
பையனுக்கு போன வருடம் திருமணம் ஆனது. பையன் தான் மூத்தவன்; 28 வயது ஆகிறது. வங்கி ஒன்றில் வேலை செய்கிறான். மருமகளும், அதே வங்கியில் தான் வேலை பார்க்கிறாள். ஒரே ஜாதிதான்; பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம். என் கணவர் இன்னும் வெளிநாட்டில் தான் வேலை செய்கிறார். எனக்கு துணை, பையனும், மருமகளும் தான். 
என் மருமகளின் அண்ணனுக்கு வயது 32. இன்னும் திருமணம் ஆகவில்லை; பெண் பார்த்து வருகின்றனர். அடிக்கடி, தங்கையை பார்க்க எங்கள் வீட்டிற்கு வருவார். அவனிடம் ஏதேச்சையாக பழகிய பழக்கம், என்னிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பையனும், மருமகளும் வேலைக்கு சென்றிருக்கும் சமயங்களில் நாங்கள் தனிமையில் பேசிக் கொண்டிருப்போம். 
இது நாளடைவில், எங்களுக்கு ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்த, ஒரு நாள் உடலளவில் இணைந்து விட்டோம். இப்போது, அவரை விட்டு பிரிய எனக்கு விருப்பம் இல்லை. வாரத்தில், இரண்டு நாட்களாவது நாங்கள் இணைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில், இருவருமே இருக்கிறோம். அவரும், இப்போது திருமணம் வேண்டாம் என, வீட்டில் சொல்லி வருகிறார். எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 
மகனுக்கும், மருமகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தால் காறித் துப்பிவிடுவர். ஒளிவு மறைவுடன் எத்தனை நாள்தான் தவறு செய்ய முடியும்... ஒரு நாள் மாட்டிவிடுவோம் என எடுத்து சொல்லியும், அந்த பையன் கேட்பதில்லை. நான் இந்த நிலைமையில் என்ன செய்வது அம்மா... இதிலிருந்து நான் விடுபட முடியாமல் தவிக்கிறேன். நீங்கள் தான் எனக்கு நல்ல ஒரு யோசனை சொல்ல வேண்டும். உங்களின் யோசனைக்காக காத்திருக்கிறேன். 
 இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு,
சிறுவயதிலேயே காமத் தீயால் சூடுபட்டவளான நீ, நல்லவளாக இருந்திருந்தால், உனக்கு நேர்ந்த அநீதியும், வலியும், வேதனையும் சாகும் வரை மறந்திருக்காது. உனக்கு கிடைத்த வாழ்க்கையை தங்கமாக மதித்திருப்பாய்; உன் கணவனுக்கு மனதாலும் துரோகம் செய்ய நினைத்திருக்க மாட்டாய்.
மகளே...மனிதர்கள் யாராய் இருந்தாலும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்தும், தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்தும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அமைதியான, நிறைவான, சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
உலகம் அறியாத, எதிர்க்க துணிவில்லாத அந்த சிறுவயதில் தான், இன்னதென்று தெரியாமல் சாக்கடையில் உழன்றாய்; அதற்கு பின்பும் உனக்கு ஒரு அமைதியான, கவுரவமான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றால், நீ உன் கணவனுக்கும், கடவுளுக்கும் எத்தனை விசுவாசமாய் இருந்திருக்க வேண்டும்?
வளர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாய் நீ. அதை மறந்து, இந்த வயதிலும் நம்மை விட சிறுபையன் நம் மேல் மையல் கொண்டு மயங்கிக் கிடக்கிறானே என்ற மிதப்பில், சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், வாரத்தில் இரண்டு நாளாவது உறவு வேண்டும் என்கிறாய். உன்னை நம்பி, தன் உற்றார், உறவினர், நண்பர், சந்தோஷம் அத்தனையும் துறந்து, கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உனக்காக உழைத்துக் கொட்ட சென்றிருக்கிறானே... உன் கணவன், அவனுக்கு நீ செய்யும் நன்றிக் கடன் இதுதானா?
உனக்குள் அடக்க முடியாத அளவுக்கு காமம் பீறிட்டு எழுகிறது என்றால், உன் நிலையை உன் கணவனுக்கு விளக்கி, ஒன்று நீ அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு சென்றிருக்க வேண்டும்; இல்லை, உன் கணவனை வேலையை விட்டு வா, இருப்பதை வைத்து வாழ்வோம் என்று வரவழைத்திருக்க வேண்டும். அதைவிட்டு, மருமகளின் அண்ணன் வந்தான், தனிமையில் பேசினோம், கிளர்ச்சியாக இருந்தது, தப்பு செய்தோம். அவனை விட்டு பிரிய முடியவில்லை என, உன் தவறுக்கு நொண்டிச் சாக்கு கூறுகிறாய். தவறுகளை நீ தெரியாமல் செய்பவள் அல்ல; அதன் விளைவுகளை தெரிந்தே செய்யும் குணம் கொண்டவள்.
எத்தனை வயதானால் என்ன...பெண் என்பவள், வெறும் காமத்திற்கு உரிய இச்சைப் பண்டம் என்பதை, உன்னைப் போன்ற பெண்கள் தான், ஆண்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
மகளே... காமம் என்பது சுடர் விட்டு எரியும் நெருப்பு; அதில் எணணெயை ஊற்றிக் கொண்டே, அணைக்க நினைத்தால் மேலும் மேலும் பற்றி எரியத்தான் செய்யுமே தவிர, ஒரு நாளும் குளிர்ந்து போகாது. அதனால், முதலில் மனதை அடக்கு; முறையற்ற காமம், உன்னையும் அழித்து, உன்னைச் சார்ந்தோரையும் நிம்மதி இழக்க வைக்கும்.
'வேட்கை வெறியின் விளைவாய் ஏற்படுவது சினமும், மனக்குழப்பமும் தான். மனக் குழப்பத்தால் நினைவை இழப்பதும், அந்நினைவை இழப்பதனால் கடமை மறக்கடிக்கப்பட்டு, புத்தி நாசமடைந்து, மனிதனை அழிவுக்கு இட்டுச் செல்கிறது. இந்த வேட்கை வெறியானது, கடலலை மேல் காற்று ஒரு தோணியை அடித்துச் செல்வதைப் போல மனிதனின் அறிவையே அடித்துச் சென்று விடுகிறது' என்கிறது பகவத் கீதை.
மூன்று சம்பந்தம் எடுத்த நீ, தனி மனுஷி அல்ல; மனம் போனபடி வாழ! உன் ஒவ்வொரு நல்ல, கெட்ட செயல்களின் பிரதிபலிப்பு உன் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடாதே; உன் கள்ள உறவால், கவுரவத்தை கெடுத்துக் கொள்ளாதே!
'இன்பத்திலும், துன்பத்திலும் பிரிய மாட்டேன்; எப்போதும் விசுவாசமாக இருப்பேன்...' என, அக்னியை வணங்கித்தான் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்திற்குள் நுழைகின்றனர். அந்த சத்தியத்திற்கு விசுவாசமாக இருக்கப்பார். ஒருத்தரின் தாலியை சுமந்து கொண்டு, இன்னொருவனை உல்லாசிக்காமல், உன் கள்ளக் காதலனுக்கு உன் வீட்டின் கதவை மட்டுமல்ல, உன் மனக் கதவையும் தாள் போட்டு விடு. உன் உடல், மனநிலையை விளக்கி, வெளிநாட்டிலிருந்து உன் கணவனை வரவழைத்து, மிச்சக் காலத்தை மன அமைதியுடன், சந்தோஷமாக வாழ்!
— என்றும் தாய்மையுடன்

No comments:

Post a Comment