Sunday, August 4, 2013

நான் 30 வயதான ஆண்

அன்பு அக்காவிற்கு — 
நான் 30 வயதான ஆண். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சந்தோஷமான குடும்பம்.
நான் படித்துக் கொண்டிருக்கும்போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரும்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக் கொண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில் தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம்.
ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந்தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என்னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே வைத்திருக்கிறாள். எந்நேரமும் என்னையே நினைத்து, தனிமையில் அழுது கொண்டிருக்கிறாள். வெளியில் எங்கும் போவதில்லை; சினிமா பார்ப்பதில்லை; புத்தகம் படிப்பதில்லை. சிறைப்பறவையாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள். 
அவள் கணவனிடமும், பலமுறை என்னைப் பற்றியே புலம்பி இருக்கிறாள். அவளுடைய நல்ல நேரம் அவளுடைய கணவன் ஒரு தெய்வம் போல. "கல்யாணத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் நான் உங்களை சேர்த்து வச்சிருப்பேன்ல...' என கூறியிருக்கிறார். "உடல் மட்டும் தான் உங்களுக்கு; என் மனசு என்னிடம் இல்ல'ன்னு இவளும் சொல்லி இருக்கா. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறது அந்த தெய்வம்.
நானும், அவளுக்கு கடிதம் எழுதி எவ்வளவோ அறிவுரைகள் கூறினேன்; அவள் கேட்பதாக இல்லை. ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. என் நினைவை அவள் மனதில் இருந்து அகற்றுவது முடியாத காரியம். நானே கூட மறந்துவிட்ட, முன்பு நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் அப்படியே கூறுகிறாள்; முன்பு கடிதத்தில் எழுதிய வாசகங்களை அப்படியே சொல்கிறாள்... "என் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் உன் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது...' என்கிறாள். 
"வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ...' ன்னாரு கண்ணதாசன். எனக்கு கடைசி வரை உன் நினைவுகள் இருக்கும். உயிர் என்னை விட்டு பிரியும் போது கூட "உன் பெயரையே தான் சொல்லிகிட்டிருப்பேன்' என, எழுதி இருந்தாள். 
இப்ப சொல்லுங்க... என்ன செய்யலாம்? தங்கள் ஆலோசனைப்படி நான் நடக்க விரும்புகிறேன். அந்த பெண் அவள் கணவனுடன் நன்றாக வாழ வேண்டும். என்னைப்பற்றிய நினைவுகளை அவள் மனதிலிருந்து நீக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்.
இப்படிக்கு,
— அன்புத் தம்பி.

அன்பு தம்பி— 
உங்கள் கடிதம் கிடைத்தது.
காதலித்தவரையே மணம் முடிப்பது எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கை பல விசித்திரமானத் திருப்பங்களை உடைய நாடகம். நாம் அந்த நாடகத்தின் கதாபாத்திரங்கள்; அவ்வளவு தான்! முதல்நாள் ராமாயண நாடகத்தில் ஆஞ்சநேயர் வேஷம் கட்டினவன், அடுத்தநாள் மகாபாரத நாடகத்தில் துரியோதனன் வேஷம் கட்டலாம்...
அப்போது அந்த வேடத்தை செவ்வனே செய்ய வேண்டுமே அல்லாது, "அய்யோ, நான் கட்டை பிரம்மச்சாரியாக ஆஞ்சநேயர் வேஷம் கட்டியவன்... ஒரு பெண்ணின் புடவையைப் பற்றி இழுக்க மாட்டேன்...' என, ஒரு நல்ல நடிகன் சொல்ல மாட்டான். 
இப்போது உங்கள் விஷயத்துக்கு வருகிறேன்... பருவம் என்ற நாடகத்தில் நீங்களும், நீங்கள் குறிப்பிட்ட பெண்ணும் காதலர்களாக நடித்தீர்கள். இப்போது காட்சி மாறி விட்டது. இல்வாழ்க்கை என்ற நாடகத்தில் அவள் இன்னொருவரின் மனைவியாகவும், நீங்கள் வேறொருத்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கணவராகவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது பழசை நினைத்து மனதை அலைபாய விடக் கூடாது.
பத்து வருடங்களாக ஒருவரை மணந்து, அவருக்காக இரு குழந்தைகளையும் பெற்றவள், "உடம்பு தான் உனக்கு. உள்ளம் வேறொருவருக்கு' என சொல்வதே தவறு. யோசித்துப் பாருங்கள்... மனசெல்லாம் எங்கோ இருக்க, கணவனின் பக்கத்தில் படுப்பது, மகத்தான துரோகம் என, நீங்கள் நினைக்கவில்லையா? 
அதற்கு ஆரம்பத்திலேயே, அந்தக் கணவரிடம் நடந்ததை சொல்லி, இவள் விலகியிருக்கலாம். 
அவளுக்குத் திருமணமாகி, பல வருடத்திற்கு பின் தான் நீங்கள் மணம் புரிந்திருக்கிறீர்கள். அப்போதே விவாகரத்துப் பெற்று, உங்களிடம் வந்திருக்கலாம். அதைவிட்டு இப்போது நினைத்து, தானும் குழம்பி, தெளிவாய் இருக்கிற உங்களது வாழ்க்கை யையும் அந்தப் பெண் குழப்புவது நியாயமே இல்லை. 
இப்போது நீங்கள் இருவர் மட்டும் இல்லை... உங்கள் மனைவி, அவரது கணவர், உங்கள் இருவரது குழந்தைகள், உங்கள் இருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... இப்படி எத்தனை பேருக்கு இதனால் பிரச்னை பாருங்கள்.
மனைவி வேறொருவனை விரும்புகிறாள் என்பது தெரிந்தும், "இதை முன்னாலேயே சொல்லி இருக்கலாம் இல்லே...' என அப்பாவித்தனமாய் கூறும் அவளது கணவர்... எப்படி தம்பி இது போன்ற நல்ல இதயத்துக்கு அவள் துரோகம் நினைக்க முடியும்? அவள் நினைத்தாலும் நீங்கள் நினைக்கக் கூடாது!
இது போல, இந்த விஷயம் எதுவுமே தெரியாத உங்கள் மனைவியையும் எண்ணிப் பாருங்கள். 
சென்றது கனவாகவே இருக்கட்டும். இப்போது கையில் இருக்கும் வாழ்க்கையை உண்மையுடன் நேசியுங்கள். அவளிடம், "நாமிருவரும் காதலித்த குற்றத்துக்காக, நம்மை சுற்றி உள்ள உறவுகளுக்கெல்லாம் தண்டனை தர வேண்டாம்...' என கூறுங்கள்...
இப்போது ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்; வெற்றி உங்களுக்கே!
வாழ்த்துகள்!

---------------------------------------------------------
காதல் இருபாலாரும் ஓர் பருவத்தில் சந்திக்கும் உணர்வு. காதலைச் சந்திக்கவும் மாட்டேன், சிந்திக்கவும் மாட்டேன் என்று இறுமாப்புடன் திரிபவர்களையும் ஒரு கட்டத்தில் கட்டிப்போட்டு ஸ்தம்பிக்க வைக்கும் அற்புதமான உயிரோவியம் இந்தக் காதல். விழிக்காதல், விரல்காதல், குரல்காதல், உடல்காதல், உள்ளக்காதல், பார்த்தக் காதல், பார்க்காக் காதல் என்று காதல் பலவகைகள். கரங்கள் இணைந்து விரல்கள் கவிதைகள் பேசுவது மட்டுமல்லாமல் கரங்கள் கொண்டு கடிதம் எழுதுவதும் காதலின் ஒரு வித வார்த்தை சுகமே. காதல் பலருக்கு வெறும் வார்த்தை. சிலருக்கு அவ்வார்த்தைகளே வாழ்க்கை.இந்தப் பெண்ணின் உள்ளத்தில் தோன்றிய காதலைத் தூற்ற மனம் ஒப்பவில்லை. ஆனால் கடந்து போன, இனியும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தைச் சிந்தித்துக் காலங்களையும் தன்னைச் சார்ந்தவர்களையும் அவதிக்குள்ளாக்குவது தவறான செயல். காதலித்த போது பிரிய சக்தியில்லையென்றால் போராடியிருக்கலாம், அதை விட்டு விட்டு வேறொருவரை மணம் செய்து குழந்தைகள் பெற்ற பிறகும் காதலரையே நினைப்பது எவ்விதத்தில் நியாயம்? நிச்சயம், இந்தப் பெண்ணிற்குத் தன் முதல் காதலை மறக்க முடியாது தான், அதற்காக நடந்ததையே நினைத்து மனம் குழம்பிக் கணவர், குழந்தைகளிடம் பிடிப்பு இல்லாமல் இருப்பது தவறில்லையா? "நான் வேறொருவரைக் காதலித்து உங்களை மணந்திருக்கிறேன், என்னால் அவரை மறக்க முடியவில்லை, உடல் உங்களுக்கு, மனது அவருக்கு" என்று கணவரையே தோழனாய் நினைத்துக் கூறியும் "முன்பே கூறியிருந்தால் உங்கள் இருவருக்கும் மணம் செய்வித்திருப்பேனே" என்ற சுடுசொல்லின்றி அன்பு செலுத்தும், ஆதரவாய் இருக்கும் கணவரின் காதலை விடவா காதலனின் காதல் பெரிதாக இருந்திருக்கப் போகிறது?பண்பில் உயர்ந்த கணவரின் அன்பை காதலின் வலியை உணர்ந்த இப்பெண்ணால் ஏன் உணர முடியவில்லை? ஏன் முயற்சிக்கவுமில்லை? காதலனும் இவரும் பேசி வைத்தப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டியிருக்கிறார். எப்பேர்ப்பட்ட நல்ல மனதுக்குச் சொந்தமானவர் இக்கணவர், எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட நல்ல கணவர் அமைவர்? இந்தப் பெண் ஒருவரது செய்கையால் இவரது கணவர் மற்றும் இரு குழந்தைகள் காதலரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் என்று எத்தனை பேர் நிம்மதி இழந்து தவிக்கப் போகிறார்கள். இன்னார்க்கு இன்னார் என்று தேவன் எழுதி வைத்தக் கணக்கை மாற்ற முடியாது, இப்பெண்ணின் முன்னாள் காதலர் வேறொருத்தியின் கணவர். இந்தப் பெண் உண்மையான காதல் கொண்டிருந்தால் மணமான காதலனின் நல்வாழ்விற்கு மனதிற்குள் தவம் செய்து நன்றாக இருக்க வேண்டியிருக்க வேண்டும், மறக்க முடியாமல் தவிப்பதை எழுதி மீண்டும் காதலனின் நீரோட்டமான வாழ்க்கையில் புகுந்து அவர் மனதிலும் சலனத்தையும் சலசலப்பையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடாது. பொல்லாத கணவர் என்று குமுறியிருந்தால் கூட இவரது தேடலில்/ பழைய நினைவுகளில் நியாயம் இருந்திருக்கும். முகம் நனைக்கும் அகம் நினைக்கும் தென்றலான காதல் மனதின் ஓரத்தில் நந்தவனப்பூக்களாய்ப் பூத்துக் குலுங்கட்டும். அந்தப் பூக்கள் நீங்கள் மட்டும் சில நேரங்களில் நுகரவே அன்றி விற்பனைக்கன்று. மயிலிறகாய் வருடும் சில நினைவுகள் மனதினில் சுமக்க வேண்டுமேயன்றி மீண்டும் துளிர்க்காதா? என்று ஏங்கக் கூடாது. நினைவுகளிலே காலங்களைக் கழிக்காமல் நினைவுகளுக்குச் சில் போது நேரம் ஒதுக்கலாம். இவரது முன்னாள் காதலர் ஒரே ஒரு கடிதம் எழுத வேண்டும், தன் மனைவியை மிக அதிகமாக நேசிப்பதாகவும் இவரை நினைப்பதற்குக் கூட நேரமில்லை என்பது போலவும் கடிதம் அமைய வேண்டும். "நான் நேசித்தப் பெண்ணானாலும் என்னால் மீண்டும் உன்னைச் சிந்திக்க முடியாது, என் மனைவி என் மேல் உயிரே வைத்திருக்கிறாள். அவளை நான் மிகவும் நேசிக்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த வாழ்க்கையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். உனக்குக் கடிதம் எழுத எனக்கு நேரம் இருப்பதில்லை, அதனால் என் கடிதத்தை எதிர்பார்க்காமல் உன் வாழ்க்கையை வாழ், இதுவே என் கடைசிக்கடிதம், கடிதத்தொடர்பில் இல்லாவிடினும் ஒரு நல்ல நண்பனாய் உன் வாழ்விற்காய் வேண்டிக் கொள்வேன். " என்று ஒரே ஒரு கடிதம், மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கடிதம் வந்தால் கூட அதற்குப் பதில் எழுத முனையக் கூடாது. இக்கடிதத்தைப் பார்த்து அந்தப் பெண் மாறலாம், மாறாமல் மனதிற்குள்ளே புழுங்கலாம், அது இந்தக் காதலரின் பிரச்சினையில்லை. நன்றாகச் சென்று கொண்டிருக்கும் இருவர் வாழ்க்கையிலும் இவர்களது கடிதப்போக்குவரத்தே சிக்கலை உண்டாக்கி விடக் கூடாது.

No comments:

Post a Comment