Wednesday, August 7, 2013

பெற்றோர்களே உஷார்

'ஊர் முழுவதும் விஷக் காற்று!'
பெற்றோர்களே உஷார்
'ஊரே வந்து பூத்தூவ
 ஊர்வலம் போகும் கல்யாணம்...
அம்மா அப்பா கைகோத்து
அட்சதை போடும் சந்தோஷம்...
ஒருமுறைதான் ஒருமுறைதான்
சில சில மகிழ்ச்சிகள் ஒருமுறைதான்..!’ - சேரனின், 'தவமாய் தவமிருந்து’ படத்தின் பாடல் வரிகள் இவை. எத்தனை பெற்றோருக்கு இந்த சந்தோஷத்தைப் பிள்ளைகள் கொடுக்கிறார்கள்? கைப்பிடித்து நடை பழகவைத்த பெற்றோரை உதறித்தள்ளிவிட்டு, காதலன் கரம்பற்றி நடக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 'நான் காதலுக்கு எதிரியல்ல; காதலன் தவறானவன் என்பதால் எதிர்க்கிறேன்’ என்று சேரன் சொல்வதே பல பெற்றோர்களின் ஆதங்கம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது அறிவுரையாக இருக்கிறது.
பெண் குழந்தைகள் வளர்ப்பில் எங்கே பிரச்னை ஆரம்பிக்கிறது? அதை எப்படி கவனமாக எதிர்கொள்வது? மனநல மருத்துவர் பிரபாகரனிடம் பேசினோம். ''ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ இருவருமே, அவர்களுடைய டீன் ஏஜ் வயதில் சிறப்பு கவனத்துடன் இருக்க வேண்டும். அதில் பெண் குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். ஒருவர் காதல் வயப்படும்போது, விளைவுகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய சிந்தனையில், 'நான் விரும்பியவன்தான் வேண்டும், அவனோடுதான் வாழ்வேன்’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும். அந்த நேரத்தில் அறிவுரைகள் எடுபடாது.
இந்த விபரீதத்தில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களின் பத்தாவது வயதில் இருந்து அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தனிப்பட்ட தேவைகள், தனிப்பட்ட ஆசைகள் தோன்றும் வயதும் அதுதான். குறிப்பாக எதிர் பாலினத்தால் எளி தில் கவரப்படும். வாழ்க்கையின் யதார்த்ததை அந்த வயதில் குழந்தைகளுக்கு கவனமாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
காதலைப் பற்றி குழந்தைகளுடன் பேசுவதிலும் விவாதிப்பதிலும் பெற்றோர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும். அதை அறிவியல் பூர்வமாக எடுத்துச்சொல்லி பிள்ளைகளை தெளிவுபடுத்துவது பெற்றோர்களின் கடமை'' என்றார்.
பேச்சாளரும் சமூக ஆர்வலருமான பாரதி பாஸ்கரிடம் பேசினோம். ''ஊர் முழுவதும் விஷக் காற்று பரவி உள்ளது. நம்முடைய வீட்டின் ஜன்னலையும் கதவையும் மட்டும் சாத்திக்கொண்டால், அதில் இருந்து தப்பித்துவிட முடியாது. ஒரு நாள் முழுக்க நாம் கண்காணித்துக்கொண்டே இருந்தாலும், செல்போனிலும் ஃபேஸ்புக்கிலும் குழந்தைகள் பலருடனும் பேசியபடியே இருக்கின்றனர். தீயவை அத்தனையும் அவர்களுக்கு அந்த வழியாகத்தான் குழந்தைகளுக்குள் வருகிறது. இதுபோன்ற வெளியுலகின் வசீகரங்களுக்குக் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க நான் எப்போதும் பரிந்துரைப்பது... வாசிப்பு பழக்கம், உயர்ந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதைப்பது, எந்தச் சூழலிலும் என்னுடைய பெற்றோர்களின் மனதை நோகடிக்க மாட்டேன் என்ற எண்ணத்துடன் அவர்களை வளர்ப்பது என்ற மூன்று வழிகளைத்தான்.
ஆனால், இவற்றை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டுமானால் பெற்றோர்களும் அதற்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களிடம் வாசிப்பு இருந்தால்தான் அது குழந்தைகளுக்கு வரும். அவர்கள் குழந்தைகளிடம் அன்பும் அவர்களுக்கு உரிய மதிப்பையும் கொடுக்கும்போதுதான், அது நமக்குத் திரும்பக் கிடைக்கும். குழந்தைகளின் மனதில் உயர்ந்த லட்சியத்தை உருவாக்குவது என்பது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கூட்டு முயற்சி. இதில் பெற்றோரைவிட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உண்டு.
மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அது அவர்களுக்குள், தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். அதுவே உங்கள் மீதான வெறுப்பாகவும் மாறும். அந்த நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால், மனம் அந்தப் பக்கம் சாயும். அந்த அன்பைக் கொடுப்பவர்கள் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், அதைப்பற்றி குழந்தைகள் யோசிக்க மாட்டார்கள். இதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று சொன்னார்.
பெற்றோர் பாடம் படிக்க வேண்டிய தருணம் இது!

No comments:

Post a Comment