Saturday, August 17, 2013

மதம்

அன்புள்ள அம்மா—
எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்டவர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொண்டோம். மதத்தை ஒருவர் மீது மற்றவர் திணிப்பதை வெறுத்தோம். 
அதனால், எங்கள் பிள்ளைகளையும் அவர்களாக ஒரு மதத்தை சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளட்டும் என்று வளர்த்து விட்டோம். 
மகள், மகன் முறையே 26, 20 வயது உடையவர்கள். இவர்களை கல்லூரியில் சேர்த்த போது, "மதம்' என்ற வெற்றிடத்தை அப்ளிகேஷன் பாரத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில், அவர்களது தந்தையின் மதத்தின் பெயரை குறிப்பிட்டோம். 
ஆனால், அவர்கள் இருவரும் எந்த மதத்தையும் பின்பற்றாமல் மனதளவில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர் களுக்கு திருமணம் என்று வரும்போது, மதம் என்ற பிரச்னை பெரிதாக தோன்றுகிறது.
மேலும், இத்தனை ஆண்டு நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து விட்டோம். இப்போது, எங்கள் மரணம் என்ற தவிர்க்க முடியாத விஷயம், என் மனதில் சஞ்சலத்தை கொடுக்கிறது. சாவை கண்டு பயம் அல்ல. என் கணவரும், நானும் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்.
எங்கள் திருமணம் சட்டபூர்வமானது தான். ஆனால், எங்கள் மத குருக்களும், மற்றவர்களும் அங்கீகரிக்க மாட்டார்கள். இதனால், நாங்கள் இறந்து போன பிறகு எங்கள் உடல்களை வைத்து, இறுதி சடங்குகளில் எங்கள் இருவரது மதத்தினரும் குழப்பம் செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்.
நாங்கள் இறந்த பின், உயிருடன் இருக்கும் எங்களது குடும்பத்தினருக்கு தொல்லை இருக்கக் கூடாது என்பது எங்கள் விருப்பம். எங்கள் மரணத்துக்குப் பின் எங்கள் உடலை எப்படி, அடக்கம் செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள். 
நாங்கள் யாரை அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. தயவு செய்து உதவி செய்யுங்கள்.
— அன்புடன் சகோதரி.
பின்குறிப்பு:

இந்த விஷயத்தை பற்றி எங்களது நண்பர்களிடம் பேசினோம்... "இதை, அன்றே நினைத்து பார்த்திருக்க வேண்டும்...' என்பது போன்று தான் சொல்கின்றனர். வாழ்க்கையை தொடங்கிய நேரத்தில், மரணத்தை பற்றி அதிகமாக நாங்கள் நினைக்கவில்லை என்பது உண்மைதான்.

அன்பு சகோதரிக்கு —
உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்களும் உங்கள் கணவரும், கலப்பு திருமணம் செய்து கொண்டதா கவும், இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதாகவும் எழுதியிருக்கிறீர்கள். 
இருந்துமே தங்களது ஜாதியை அடுத்தவருக்கு வற்புறுத்தாமல், குழந்தைகளிடமும் திணிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, மரணத்திற்கு பின் புதைப்பரா, எரிப்பரா... எந்த மத அடிப்படையில் ஈமக் கிரியைகள் நடக்கும் என்பது பற்றி என்ன கவலை?
சகோதரி, மற்றவர்களைப் போல் நாமும் ஏதோ ஒரு மதத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும். அப்போது தான் நாம் இறந்த பிறகு நம்மை நல்லடக்கம் செய்ய, இரு மதத்தில் ஒன்றாவது முன் வரும் என்பதெல்லாம், தேவையில்லாத கவலை என்று தான் நான் சொல்வேன்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருமணத்தின் போதும், குழந்தை பிறப்பின் போதும் தான், எந்த ஜாதியின் அடிப்படையில் திருமணம் செய்விப்பது... குழந்தைக்கு பெயர் வைப்பது போன்ற பிரச்னைகள் கிளம்பும். எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி, முறைத்தபடி நிற்பர்.
ஆனால், ஒரு மனிதன் இறந்து விட்டால், அத்தனை பேருமே அடுத்தாற்போல, சடலத்தை எப்போது எடுப்பது என்பதில்தான் தீர்மானமாக இருப்பர். அதிக நேரம் காக்க வைக்க மாட்டார்கள்.
அப்படி இரு மதத்தினருக்கும் பிரச்னை வந்தால், அருகிலிருக்கும் சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் எடுத்து போய் உடலை எரிப்பதோ, புதைப்பதோ, ஏதோ ஒன்றை செய்து விடுவர்.
அப்படி ஏதோ ஒன்றை எந்த மதத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறீர்கள். வாழ்கிற நாளெல்லாம் உங்களை மதமா காப்பாற்றுகிறது? மனிதம் ஒன்றே புனிதம் என்றுதானே நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நாம் இறந்த பிறகு, நமக்குள் இருந்த ஜீவன், மேலும் இருக்கப் போகிறதா அல்லது காற்றோடு கரைந்து விடப் போகிறதா என்பது இதுவரையில் யாருமே கண்டுபிடிக்காத புதிர்.
ஆன்மா என்று ஒன்று இருக்கிறது. அதற்கு, இது போன்ற இறுதி சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்தால் தான், அது இறைவனிடம் போய் சேரும் என்று நீங்கள் கருதினால், அந்த இறைவன் இப்போது கூட உங்களுக்கு வெகு சமீபத்தில் தான் இருக்கிறார். 
வாழ்க்கை முழுவதும் அன்பிலேயே குளித்து எழுந்த ஜீவனுக்கு, ஆண்டவனிடம் போய் சேர மதம் என்கிற, "விசா' தேவையில்லை. அப்படிப்பட்ட மத சடங்குகள் இல்லாவிட்டாலும் நல்லவர்களின் ஆன்மா, தன்னை சுற்றியுள்ளவர்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கும்; வாழ்த்தும்.
வேண்டுமானால் ஏதோ ஒரு தொகையில் உங்கள் இறப்பிற்கு பின் அன்னதானம் செய்வதற்கோ, மருத்துவ உதவிக்கோ, கல்விக்கோ, நீங்கள் ஒதுக்கலாம். இதுவே மிகச்சிறந்த வழி. எல்லா மதமும் இதையே வலியுறுத்துகின்றன.
உங்கள் குழந்தைகள் இருவருமே உங்களைப் போலவே அவரவர்களுக்கு பொருத்தமான, பிடித்த துணையை தேடிக் கொள்ளட்டும். அக்காலத்தில் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இருந்த துணிச்சலில் கொஞ்சமாவது அவர்களுக்கு இருக்காதா! 
எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றும், நான் இறந்த பிறகு நம்மை என்ன செய்வர் என்றும் அனாவசியமாக கவலைப்படுவதை விட்டு வாழ்க்கையை அனுபவியுங்கள்.
காக்கைகளும், குருவிகளும், நாய்களும், பூனைகளும் இந்த கவலையெல்லாம் இல்லாமல் எத்தனை சந்தோஷமாக இருக்கின்றன...
மரணத்தை இப்போதிருந்தே ஆரத்தி கரைத்து வரவேற்க வேண்டாம்!
வாழ்தலில் பற்று வையுங்கள்; வாழ்த்துகள்!

No comments:

Post a Comment