Monday, August 19, 2013

தொடரும் பாலியல் தொல்லைகள்

தொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்
உலகின் இயக்கத்துக்குத் தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவள் பெண். ஆனால், இன்றைய பெண்கள் பலரின் நிலையோ பரிதாபம். 
வீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது இடங்கள் எனப் பல்வேறு சூழல்களிலும் பெண்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமான பிரச்னை, பாலியல் தாக்குதல்கள். 'நகர்ப்புறங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களில் 10 சதவிகிதம் பேர்தான், தனக்கு நேர்ந்தது பற்றி புகார் செய்கிறார்களாம். மற்றவர்கள் அதை வெளியில் சொன்னால் அவமானமோ, ஏதேனும் பிரச்னையோ வந்துவிடும் என்று பயந்து மறைத்துவிடுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு.  
ஆக்ஸ்ஃபேம், சமூக மற்றும் ஊரக ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், வேலைக்குச் செல்லும் 17 சதவிகித பெண்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், உடல்ரீதியாக இல்லாமல், மனரீதியான தாக்குதல்கள் நடப்பதாக தெரிவித்துள்ளனர். கூட்டமாக இருக்கும் ஆண்கள் பாட்டு பாடுவது, கிண்டல் செய்வது, கமென்ட் அடிப்பது போன்றவற்றைச் செய்வதாக 70 சதவிகிதப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அலுவலகத்தில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்போருக்குத் தண்டனை, அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரும் அளவுக்கு பிரச்னை உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்னையை எப்படித் தெரிந்துகொள்வது? இதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தவிர்ப்பது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
உடன் பணிபுரிபவர், உறவினர், ஆசிரியர், மாணவர், நண்பர், முன்பின் அறிமுகம் இல்லாதவர் எனப் பாலியல்ரீதியான தாக்குதல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஒருவர் நேரடியாகத் தொட்டுச் செய்வது மட்டும் பாலியல்ரீதியான தொந்தரவு இல்லை. ஆபாசமாக கமென்ட் அடிப்பது, செய்கை காட்டுவது போன்றவையும் தொந்தரவுதான். வீட்டில் இருப்பவர்களைவிட பணிக்குச் செல்லும் பெண்களே பாலியல்ரீதியான தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். காரணம் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரிகள் எனப் பலரையும் சார்ந்து இருக்கவேண்டிய சூழல்.
இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்தாத நபர்களே குறைவு. செல்போனின் மூலமாகவே ஒருவரோடு ஒருவர் 'சாட்’ செய்ய வழி இருக்கிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் பலர் தங்களின் குடும்ப விவரம், செல்போன் நம்பர் போன்றவற்றை ஈஸியாக விட்டுச்செல்கிறார்கள். இந்தத் தகவல்களை வைத்து சில ஆண்கள், பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத அறிமுகமற்ற ஆண்களிடம் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதே தெரியாத நிலையில் தங்களை பற்றிய தகவல்களைக் கொடுப்பது தேவையற்ற பிரசனைகளையே கிளப்பிவிடும்.
''பெண்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் கவனத்துடன் கையாள வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்ய ஓடோடி வரக்கூடிய சமூகம், அவர்களின் முதுகுக்குப் பின்னால், 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியும்’ என்று பழைய பஞ்சாங்கத்தைப் பேசவும் தவறுவது இல்லை. அதனால் இதுபோன்ற சிக்கல்களை விடுவிக்க மிகக் கவனமான வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியம்'' என்கிறார் நெல்லையைச் சேர்ந்த மனநல மருத்துவர் 'சினேகா’ பன்னீர் செல்வன்.
''பெண்களைப் போகப்பொருளாக நினைக்கும் ஆண்கள், குடிகாரர்கள், குற்றச்செயல்கள் செய்வதையே வாடிக்கையான நபர்கள், சமூக விரோதிகள், சாதாரண நபர்கள் என யார் மூலமாகவும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படலாம். வயது வித்தியாசமே இல்லாமல் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்கள்கூட இந்தச் சமூகத்தில் செய்தியாக வந்துகொண்டுதானே இருக்கிறார்கள். இது போன்ற தொந்தரவுகள், பெண்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு அந்தத் தவறு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், அவர்களால் நிம்மதியாக எந்த வேலையையும் செய்ய முடியாமல், மன நோயாளியாகவே மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு மனப் பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை, நெஞ்சுவலி, கை, கால், தலைவலி உபாதைகள் போன்றவை ஏற்படலாம். எப்போதும்போல அவர்களால் உற்சாகமாக செயல்பட முடியாமல், எதையோ இழந்ததைப்போல இருப்பார்கள். தேவையற்ற பயம் இருக்கும். தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் குடும்பத்தினரும் உறவினர்களும் பேசி அவர்கள் மனதில் இருக்கும் பிரச்னையைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த பயத்தில் இருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க மனநல மருத்துவரால் முடியும். அவசியம் ஏற்பட்டால் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் பெண்கள் குற்றத் தடுப்புப் பிரிவின் உதவியையும் அணுகி பிரச்னைகளைத் தீர்க்க முயலலாம்'' என்றார்.
ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்
 பிரச்னைகளைத் தவிர்க்க...
 பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடக்கலாம். ஆனால் அதனைத் துணிச்சலோடு எதிர்க்கும் குணத்தை பெண்களிடம் உருவாக்க வேண்டும்.
 குழந்தைப் பருவத்தில் அப்பா, அம்மா, சகோதரன், திருமணத்துக்குப் பின் கணவரைத் தவிர வேறு எந்த ஆணாக இருந்தாலும் உள்ளாடை போடும் இடங்களை தொடக் கூடாது. அப்படிச் செய்வது பாலியல் தொந்தரவு என்பதை, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 சில ஆண்கள், தேவையற்ற சமயங்களில்கூட தாங்களாகவே முன்வந்து உதவிசெய்வார்கள். சிலர் இரட்டை அர்த்தத்தில் பேசி சிரிக்கவைக்க முயற்சிப்பார்கள். ஒருசிலர் சாதாரணமாகத் தொடுவதுபோல தோளைத் தொட்டுப் பேசத் தொடங்குவார்கள். இவர்களை முதலிலேயே தவிர்த்துவிட வேண்டும்.
 மூன்றாவது நபர்கள், நாம் கேட்காமலே உதவிசெய்ய வந்தால், அதில் வில்லங்கம் இருக்கிறது என்பதை பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அதனை முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது.
 'உங்க புடவை கலர் சூப்பர்... டிசைன் நல்லா இருக்கு’ என்று பேச்சைத் தொடங்கும்போது 'என் புடவை எந்த நிறத்தில் இருந்தால் என்ன சார், வேலையைப் பாருங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டால், அடுத்த 'மூவ்’ தவிர்க்கப்படும்.
 அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டு நம்மைக் கவனிக்கும் ஆண்களிடம், பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் அடிக்கடி போன் செய்தாலும், எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் உடனே கண்டிக்க வேண்டும்.
 ஆண் தன்னிடம் தவறாகப் பழகுகிறான் என்பதை, பெண்களால் எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும். அப்படித் தெரிந்துவிட்டால், தயவுதாட்சண்யமே பார்க்காமல், 'தப்பு பண்ற... இனி எங்கிட்ட பேசாதே’னு சுருக்கமாக அதே சமயத்தில் துணிச்சலான குரலில் சொல்லிவிட வேண்டும்.
 சில பெண்களுக்கு சிரிக்கவைக்கும் ஆண்களைப் பார்த்து ஈர்ப்பு ஏற்படலாம். அப்படி நடப்பதை உணரத் தொடங்கியதுமே அத்தகைய நட்பை உடனே துண்டித்துவிட வேண்டும். தவறு எந்த பக்கத்திலும் இருந்து வரலாம். ஆனால் பெண்கள் அதிகக் கவனமாக இருந்து தேவையற்ற பழியை சுமக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,
 அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, அவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களே பாலியல் தொந்தரவு எப்படி ஏற்படலாம் என்பது குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment